Skip to content

பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (37). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி திவ்யா(32). இவர்களுக்கு 8 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்கு திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபல மாலுக்கு குடும்பத்தினர் அனைவரும் பைக்கில் சென்றுவிட்டு நேற்றிரவு 11.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிந்தனர். அரும்பாக்கம் 100 அடி சாலையில் வரும்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ், திடீரென்று அவர்களது பைக் மீது மோதியுள்ளது.

இதில், திவ்யா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்து பொதுமக்கள் ஓடிவந்தபோது ஆம்னி பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து காயத்துடன் கிடந்த சிவச்சந்திரன், அவரது இரண்டு குழந்தைகளை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு திவ்யா உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து ஆம்னி பேருந்து டிரைவரை தேடிவந்த நிலையில், இன்று அதிகாலையில் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் டிரைவர் சரணடைந்தார். அவரிடம் விசாரித்தபோது பாலவாக்கம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிந்தது.

error: Content is protected !!