இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரானது சென்னை மற்றும் மதுரையில் நவ.28 முதல் டிச.10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளை சேர்ந்த அணிகள், 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதேசமயம் இந்த தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகியதை அடுத்து, ஓமன் அணிக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 5இல் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்தொடருக்கான கோப்பை மற்றும் இலச்சினையை அறிமுகப்படுத்தியிருந்தார். மேலும், இத்தொடர் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தொடருக்கான கோப்பை மற்றும் இலச்சினையானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்களின் பார்வைக்காக எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், இளையோர் உலகக்கோப்பை போட்டிகள் நடைப்பெறும் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள், மின்விளக்கு வசதிகள், பாதுகாப்பு பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “14ஆவது ஆடவர் இளையோர் ஹாக்கி உலகப் கோப்பை போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த மாணவர்களை பேருந்துகள் மூலம் அழைத்து வந்து போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொடர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக உலகக் கோப்பை மற்றும் இலச்சினை பொதுமக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தொடருக்கான அனைத்து விதமான பாதுகாப்பு வசதி, உணவு வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டைவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, “இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரை காண வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு நபருக்கு தலா நான்கு டிக்கெட் வீதம் வழங்கப்படும். ரசிகர்கள் இந்த டிக்கெட்டை ticketgenie.in என்ற இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு குறிப்பிட்ட பகுதியை வாகனங்களை நிறுத்த இடமாக ஒதுக்கி உள்ளனர். தெருநாய்கள் மைதானத்திற்குள் நுழையாதவாறு உரிய நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மூலம் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சார்பில் அனைத்து இடங்களிலும் சிசிடி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 500க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள நிலையில், ட்ரோன்கள் மூலமும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது” என்றார்.

