Skip to content

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

குடியரசு தினமான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் ஹர்சோர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட் (187 பைகள்), 9 பெட்டி டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டி ஃப்யூஸ் வயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹர்சோர் கிராமத்தைச் சேர்ந்த சுலைமான் கான் (58) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது வெடிபொருள் சட்டம் மற்றும் பிஎன்எஸ் (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2025 நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதே வகை அம்மோனியம் நைட்ரேட் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சுரங்கங்களுக்கு விற்பனை செய்யவே இவற்றை பதுக்கியதாக கைதான நபர் கூறினாலும், இன்று குடியரசு தினம் என்பதால் ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் மாவட்ட சிறப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!