திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கீரைக்கடை பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருச்சி எடத்தெரு பிள்ளைமா நகரைச் சேர்ந்த ரவுடி அன்சாரி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் போலீசார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.
காஜாபேட்டையில் இருவர் பிடிபட்டனர்: இதேபோல், திருச்சி காஜாபேட்டை பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், பாலக்கரை கீழப்புதூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை (27) மற்றும் காஜாபேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் (20) ஆகிய இருவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, 8 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட மூன்று நபர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

