சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல். 2 மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் என்று, குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு ‘மாதந்தோறும், 15,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்’ என கூறியுள்ளனர்.
பணம் கொடுக்க சக்திவேல், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் வழிகாட்டுதல்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட, 15,000 ரூபாயை, கொண்டலாம்பட்டியில் வைத்து ஏட்டு ராஜலட்சுமியிடம் நேற்று மதியம் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்.ஐ.,க்கள் சரவணன், ராமகிருஷ்ணன், ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.