நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் நடந்தது.
நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, காலை 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை, தேர்வு மையத்துக்குள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், வந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.அடையாள அட்டை, ஹால் டிக்கெட் மறந்த மாணவர்களும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு கூடத்துக்குள் செல்ல மொபைல் போன், கைக்கடிகாரம், உலோக தாயத்து, கொண்டை ஊசி, வெள்ளி அரைஞாண் கயிறு, மெட்டி, கொலுசு, உள்ளிட்டவை அகற்றப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாணவி அணிந்திருந்த மேலாடையில் இருந்த பட்டன்களை அகற்றினால் தான் அனுமதிக்க முடியும் என்றதால் அந்த மேலாடையின் பட்டன்கள் நீக்கப்பட்டன. மாணவிகள் ஜடையை பின்னக்கூடாது, தலைவிரி கோலமாக போக வேண்டும் என்றதால் அனைவரும் தலைவிரிகோலமாக சென்றனர். திருவாரூரில் ஒரு மாணவி தாலியை கழற்ற சொன்னதால், தாலியை கழற்றி விட்டு தேர்வு எழுத சென்றார்.
ஒளி ஊடுருவும் தண்ணீர் பாட்டில்கள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. கலர் பாட்டில்கள் அனுமதிக்கப்படவில்லை.
இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியில் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ மாணவிகள் கூறும்போது தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்றனர்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்காக 22.70 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் அதாவது 1. 20.80 லட்சம் பேர் தான் தேர்வு எழுதினர். அதாவது 1.90 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 91.4% பேர் தான் தேர்வு எழுதி உள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவு.