Skip to content

தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய தா.பேட்டை மாணவி 100க்கு 98 பெற்றார்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே   உள்ள கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51) உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனாஸ்ரீ  தா.பேட்டை சௌடாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். சமூக அறிவியல்  தேர்வு  எழுதுவதற்கு  கடந்த ஏப்ரல்  15ம் தேதி   காலை நிரஞ்சனா தயாராகி கொண்டிருந்தார்.  அப்போது திடீரென  நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பால்  இறந்து போனார்.   தந்தையின் உடலைப்பார்த்து நிரஞ்சனாவும் குடும்பத்தினரும் கதறினர்.  சிறிது நேரத்தில் ஊரே அங்கு திரண்டு விட்டது. உற்றார் உறவினர்கள் கூடிவிட்டனர். தேர்வுக்கு  சிறிது நேரமே இருந்தது.  துக்க வீடு என்றபோதிலும் சிலர்   நிரஞ்சனாஸ்ரீயின் எதிர்காலத்தை குறித்து யோசித்தனர்.  முரளி  இறந்து விட்டார். அதற்காக  நன்றாக படிக்கும் நிரஞ்சனாஸ்ரீ தேர்வுக்கு செல்லாமல் இருக்க வேண்டாம் எனக்கூறி,  நிரஞ்சனாஸ்ரீயின் கண்ணீரை துடைத்து , அவரை தேற்றி,   டூவீலரில் அவரை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்றனர் உறவினர்கள். அதற்குள்  அந்த தேர்வு மையம் முழுவதும் தெரிந்து விட்டது நிரஞ்சனாஸ்ரீயின் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தி. சக மாணவிகள் துக்கம் விசாரித்தனர்.  ஆனாலும் தைரியத்துடன்,  சமூக அறிவியல் தேர்வு எழுதினார்   நிரஞ்சனாஸ்ரீ.  அந்த தேர்வில் 100க்கு 98 மார்க்  எடுத்து உள்ளார். மொத்தத்தில் அவர்  461 மார்க் பெற்றுள்ளார்.  பாட வாரியாக அவர் பெற்ற மார்க்:  அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் – 96, ஆங்கிலம் – 94, கணிதம் – 73, சமூக அறிவியல் – 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனாஸ்ரீ தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு சென்று சமூகஅறிவியல் தேர்வு எழுதினார். கல்வி  முக்கியம்,  படித்தால் தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். நல்ல உயர்ந்த நிலையை அடைய படிப்பது முக்கியம்,  நன்றாக படி என  தந்தை  அடிக்கடி சொல்வார். இன்று எனது ரிசல்ட்டை தெரிந்து கொள்ள என் தந்தை இல்லை என்பது  வருத்தமாக இருக்கிறது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான் தந்தை இறந்த நிலையிலும் அரசு தேர்வு எழுதினேன். நன்கு படித்து தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் எனவும் மாணவி நிரஞ்சனாஸ்ரீ தெரிவித்தார். மாணவியின் மனதைரியம், கல்வி மீது அவர் கொண்டு  பற்று ஆகியவற்றை பாராட்டி தமிழக அரசு நிரஞ்சனாஸ்ரீயை கவுரவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
error: Content is protected !!