முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய போர்க்குரல் , தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்
தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போட்ட தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது., அதில் கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்ததுடன், கவர்னர் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
அத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கும் குறிப்பிட்ட காலக்கெடுநிர்ணயிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் நகல்கள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சுதந்திர இந்தியாவில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த தீர்ப்பினை வரவேற்றன. அதே நேரத்தில் ஆளும் பாஜக மட்டும் இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தது. நம்முடைய துள்ளாட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் மூக்கணங்கயிறு போட்டு விட்டது என்று கருதியது பாஜக .
இதை எப்படியாவது உடைக்க வேண்டும் என கருதிய மத்திய அரசு ஜனாதிபதி மூலம் கடந்த 13-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி ஒரு மனு அனுப்பியது.
எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் அதில் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழக அரசு, தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம் என்பது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, சமான்ய மக்களுக்கும் புரியும்.
இந்த 14 கேள்விகள் எழுப்பப்பட்டவுடனேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதனை கண்டித்தார். அத்துடன் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சித்தலைவர்கள், எதிர்க்கட்சி முதல்வர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார். அந்த 14 கேள்விகளின் முக்கிய சாராம்சம் என்ன?
கவர்னர் இடம் மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி கவர்னரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு தடையாக உள்ளதா?
அரசியல் சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின் படி, ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா? அரசியல் சட்டத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
நமது அரசியலமைப்பின் பாதுகாவலராக, கூட்டாட்சி அமைப்புடன் கூடிய ஜனநாயகக் குடியரசை அடிப்படையாக கொண்ட நமது உச்சநீதிமன்றம், இவ்வழக்கில் அரசியலமைப்பை சரியாக விளக்கியுள்ளது. ஆனால், வெளிப்படையாக பாஜக இந்த தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது. மாநில அரசுக்கு எதிராக பிடிவாத போக்கினைக் கடைபிடிக்கும் ஆளுநரை எதிர்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களும் இந்த தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாக பயன்படுத்தலாம். பாஜக அரசாங்கம் தனது சூழ்ச்சியின் முதல் அங்கமாக, குடியரசு தலைவரை உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு பரிந்துரையை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஆளுநர்களின் விவகாரத்தில் கேள்விக்குரிய பிரச்சினை ஏற்கெனவே நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பால் முடிவு செய்யப்பட்டிருக்கும் போது, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பை பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்பது அனைவரும் அறிந்தது. ஆனாலும், பாஜக அரசு ஒரு பரிந்துரையை பெறுவதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது, அவர்களின் தீய நோக்கத்தை காட்டுகிறது.
உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசு தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, நமது உச்சநீதிமன்றம் தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்தபடி, அரசியல் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர் நோக்குகிறேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த கடிதத்தில் கூறி உள்ளார். இந்தியாவில் எப்போதும் உரிமைகளுக்காக முதல் குரல் தமிழ்நாட்டில் இருந்து தான் புறப்படும். அதுவும் திமுகவில் இருந்து தான் புறப்படும். மாநில முதல்வர்களுக்கு பல உரிமைகளை பெற்றுத்தந்த இயக்கம் திமுக.
அந்த வகையில் இப்போது மாநில அரசுகளை சீர்குலைக்க கவர்னர் எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த, முதல்வர் உரிமைக்குரல், நீதியின் குரல் எழுப்பி இருக்கிறார். இந்தியாவில் சில மாநில அரசுகள் எப்போதும் அடிமை வாழ்வில் சுகம் கண்டு காலத்தை ஓட்டிக்கொள்ளும். ஆனால் திமுக அப்படி இல்லை. உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்படும் திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இப்போது எடுத்திருக்கிற முயற்சியிலும் நிச்சயம் வெற்றி பெறுவார்.