மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி நேற்று முதல் கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அதே போல மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியை ஒட்டி கனமழை பெய்து வருகிறது.
இதனால் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உள்ள கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குற்றாலத்தில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோடைகால விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் பலரும் கோவை குற்றாலத்திற்கு குளிக்க வரும் நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க வனத்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர் .
