தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில் தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்ள வந்ததாக கூறினர். திருப்பத்தூர் சாம்நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் சுகுமார் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
அதன் பேரில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில் புரோக்கர்கள் கூறியதை அடுத்து 8 கர்ப்பிணி பெண்கள் திருப்பத்தூர் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆளில்லா வீடுகளை ஒருநாள் வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டர் நடத்தி வருவதை புரோக்கர்கள் வாடிக்கையாக கொண்டிருந்தது அம்பலமானது. . பெண் சிசுக்களை அழிக்க ஸ்கேன் சென்டர் நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். புரோக்கர்கள் 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த சுகுமாரையும் நேற்று போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை எத்தனை பேருக்கு பாலினத்தை தெரிவித்து உள்ளார். அதில் எத்தனை பெண் சிசுக்களை அழித்தார் என பல கோணங்களிலும் விசாரணை நடக்கிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் சுகுமார் டாக்டருக்கு படிக்கவில்லை. பிஎஸ்சி படித்த நிலையில் ஸ்கேன் செய்வதற்கான பயிற்சி பெற்றவர், அத்துடன் ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யும் ஊழியராக வேலை பார்த்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இவர் இதே குற்றத்திற்காக ஏற்கனவே 3 முறை கைது செய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொழிலில் சுகுமார் அதிக அளவில் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.