கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் பரபரப்பு…
வாதம்…
டி.எ.ஸ்.பி தரப்பில் த.வெ.க. நிர்வாகிகள் மீது அடுக்கக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அப்போது கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் அமர்வு முன்பு நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..
காவல்துறை தரப்பு : கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
தவெக தரப்பு : ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரையில் யாரையும் கைது செய்யக் கூடாது. விஜய் பரப்புரைக்கு வந்தது தானாக வந்த கூட்டம்; வண்டி வைத்து அழைத்து வரவில்லை.1.20 லட்சம் சதுர அடி கொண்ட லைட் அவுஸ் பகுதியில் போலீஸ் அனுமதி வழங்கவில்லை.
காவல்துறை தரப்பு : லைட் அவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பு அதிமுக பிரச்சாரம் நடந்தபோது அதிக வாகனங்கள் வந்தன. அதிக வாகனங்கள் வந்ததால் அந்த இடத்தை விஜய் பிரச்சாரத்துக்கு வழங்கினோம்.
நீதிபதி : மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை.
தவெக தரப்பு : விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் வருவார்கள் என காவலர்களிடம் கூறினோம்.
நீதிபதி : விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்?
தவெக தரப்பு : சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம்.
நீதிபதி: வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் எப்படி குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என்று கணித்தீர்கள். விஜய்யை பார்க்க குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள்; அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் வந்தால் அவர்களை பார்க்க வருவது கட்சிக் கூட்டம், விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். தவெக கேட்ட 3 இடமுமே போதுமானது அல்ல. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?.
காவல்துறை தரப்பு : கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை. வேகமாக வரச் சொல்லி போலீசார் கூறினார்கள். போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றார்கள். புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோயில் சந்திப்பில் தாமதம் செய்தனர். கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வந்தனர். முனியப்பன் கோயில் சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார். கேரவனுக்குள் செல்லாமல் விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தாமதப்படுத்தியது தான் நெரிசலுக்கு காரணம்.
தவெக தரப்பு: கூட்டத்திற்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் ஜெனரேட்டர் வசதி செய்து இருந்தோம். கூட்டம் அதிகரிக்கும் என கூறிய போலீசார் கூடுதல் பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். அசம்பாவித சம்பவத்திற்கு த.வெ.க. தான் காரணம் என்று போலீசார் கட்டமைக்கின்றனர். அதிகப்படியான போலீசார் வந்திருக்க வேண்டும். இரவு 10 மணி வரை அனுமதி கேட்டிருந்தோம். போலீசார் தடியடி நடத்தியதால் சாக்கடை கால்வாயில் தொண்டர்கள் விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் காவல்வாயில் விழுந்த நிலையில் மேலும் பலர் கால்வாயில் விழுந்து காயமடைந்தனர்.
காவல்துறை மற்றும் த.வெ.க. வழக்கறிஞர் இடையே சுமார் 1 மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை நீதிபதி ஒத்திவைத்தார்.