மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10வது மாடியில் பற்றிய தீ மளமளவென 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் குடியிருப்பில் உறங்கிக்கொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கும்பின் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. ஆனாலும், இந்த தீ விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 2 பெண்கள், 6 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, படுகாயமடைந்த 10 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.