நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள செழியநல்லூர் பகுதியில் 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும், ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் பிரித்திவ்ராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட களஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு அருகே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டை கண்டுபிடித்தார். அந்த கல்வெட்டு தூணின் ஒரு புறத்தில் சங்கு மற்றும் சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்ப்பகுதியில் தற்காலத் தமிழில் கல்வெட்டு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கல்வெட்டை தொல்லியல் துறை உதவி பேராசிரியர்கள் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 748, தை மாதம் 28-ம் நாள் நிறுவப்பட்டது என்பதும், இது சுமார் 453 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரியவந்துள்ளது. இக்கல்வெட்டு ‘திருவிடையாட்டம்’ எனும் நில தானத்தைப் பற்றி விளக்குகிறது. அக்காலத்தில் மன்னர்களோ அல்லது செல்வந்தர்களோ கோயில்களின் தினசரி பூஜைகளுக்காக நிலங்களை வழங்கியதை இது குறிக்கிறது. கல்வெட்டில் ‘திருவேங்கடநாதர்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளதன் மூலம், அப்பகுதியில் ஒரு காலத்தில் பழமையான பெருமாள் கோயில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் இடம்பெற்றுள்ள ‘புறவாரி’ என்ற சொல், தானமாக வழங்கப்பட்ட நிலத்திற்கான அரசாங்க வரிகள் நீக்கப்பட்டு, அந்த வருமானம் முழுமையாகக் கோயிலைச் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இதே செழியநல்லூர் பகுதியில் உதவிப் பேராசிரியர் மதிவாணன் பழங்காலக் கருங்கல்லாலான பீரங்கி குண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். இது குறித்து உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் பெரிய வாகை மரம் ஒன்று விழுந்தபோது அதன் வேர்ப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான குண்டுகள் வெளிப்பட்டதாகத் தெரிவித்தனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாத்து வைத்திருந்த சில குண்டுகளை ஆய்வுக் குழுவிடம் ஒப்படைத்தனர். இவை 2 மற்றும் 3 அங்குல விட்டத்தைக் கொண்டுள்ளன. இவை ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை பேராசிரியர் சுதாகர் தெரிவித்துள்ளார். 450 ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்யப் பெரிதும் உதவும் இந்தத் தடயங்களைக் கண்டறிந்த குழுவினரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.

