Skip to content

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது

நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி வயது 25. இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் வயது 23 என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததிலிருந்து இருவருக்கும் மாறி மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தோணி தனது மனைவி பாக்கியத்தாயிடம் உனது அப்பா வீட்டிற்கு சென்று 10 பவுன் நகை அல்லது 10 லட்சம் பணம் வாங்கி வருமாறு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து நேற்று இரவு நேரத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் அந்தோணி மனைவி பாக்கியத்தாயை தங்களது வீட்டின் அருகிலுள்ள தங்களுக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க அழைத்துச் சென்று கொலை செய்து விடலாம் என்ற எண்ணத்தில் திட்டம் தீட்டி அழைத்துச் சென்றுள்ளார். விபரம் தெரியாத பாக்கியத்தாய் கணவர் சமாதானம் ஆகிவிட்டார் என நம்பி அவருடன் சென்றிருக்கிறார். கிணற்றின் அருகே சென்றதும் சந்திரன் மனைவி பாக்கியத்தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் தள்ளிவிட்டு உள்ளார். இன்று காலை எதுவும் நடக்காதது போல தனது மனைவியை காணவில்லை என அந்தோணி தனது தாயிடம் தெரிவித்து இருவரும் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி உள்ளனர். தானே மனைவியை கொலை செய்த அந்தோணி தனது தாய் மற்றும் உறவினர்களை நம்ப வைப்பதற்காக உண்மையாகவே மனைவி காணாமல் போனது போல சித்தரித்து அப்பாவி போல தேடி இருக்கிறார். 


அதனைத் தொடர்ந்து அந்தோணி தனது தாய் மூலமாக அருகிலுள்ள மானூர் காவல் நிலையத்தில் மருமகளைக் காணவில்லை என புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று அந்தோணியை போலீஸ் ஸ்டேசனிற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின்னாக முரணான தகவல்களை அந்தோணி  தெரிவித்திருக்கிறார். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் குறுக்கு விசாரணை செய்தபோது தானே மனைவியை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியதை அந்தோணி  ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை மானூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

error: Content is protected !!