தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் வேகப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர். அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்ட நிலையில் நேற்று முதல் நேர்காணலும் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். நேற்று காலை, சேலம் மாநகர், சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமும் நேற்று நேர்காணல் நடந்தது.
இன்று காலை முதல் கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டம் மற்றும் மாலை திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிகொண்டு ஜெயலலிதா கெட்டப்பிலேயே வலம் வரும் ஜெயலட்சுமி என்கிற அம்ருதா, இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த நிலையில் அதிமுகவினரால் துரத்தப்பட்டுள்ளார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை அங்கிருந்து அதிமுகவினர் வெளியேற்றி உள்ளனர். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி என்கிற அம்ருதா, கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். எல்லோரையும் மீண்டும் அழைத்துப் பேசிவிட்டு என்னிடம் சொல்வதாகச் சொல்லி இருக்கிறார் அமித் ஷா என அப்போது கூறி இருந்தார் ஜெயலட்சுமி. அப்போது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

