Skip to content

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட ஜேசிபி ஆபரேட்டரின் உடல் மீட்பு..

  • by Authour
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கல்லணை கால்வாய் படித்துறையில் நேற்று இரவு குளித்துக் கொண்டிருந்த கணவர், மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சின்ன காங்கேயம் பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் அந்தோணி (40). ஜேசிபி ஆபரேட்டர். இவரது மனைவி பேபி ஷாலினி (35). இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் பூதலூர் கல்லணை கால்வாய் ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். ஆற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்வதால் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் அந்தோணி மற்றும் பேபி ஷாலினி இருவரும் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். இதில் அந்தோணி ஆற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து கதறி துடித்த பேபி ஷாலினி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இருப்பினும் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்ட அந்தோணியை யாராலும் மீட்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் வெளிச்சம் போதாமல் ஆற்றில் அந்தோணியை தேட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் பூதலூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் சித்திரக்குடி பாலம் பகுதியில் அந்தோணி உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
error: Content is protected !!