கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும்

அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் கரூர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காவல்துறையினர் மற்றும் தவெக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடம் கடந்த மூன்று மாதங்களாக தொடர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள், சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் உயர்தர தொழில்நுட்ப கேமராக்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று தான்தோன்றி மலை பகுதியில் உள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கொண்டு வரப்பட்டது.
சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் வாகனத்தின் உள்ளும் வெளியும் சென்று ஆய்வு செய்தனர்.
குறிப்பாக வாகனத்தின் மேல் விஜய் ஏறி பேசினார் இடத்திற்கு அதிகாரிகள் சென்று, அளவீடு செய்யும் டேப் உதவியுடன் நீளம், அகலம் ஆகியவற்றை இன்ச் பை இன்ச் முறையில் துல்லியமாக அளவீடு செய்தனர். இந்த முழு ஆய்வும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டது.
மேலும், அந்த வாகனத்தை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் பரணிதரன் என்பவரிடம், விஜய் எவ்வாறு வாகனத்தின் மேல் ஏறினார், எங்கு நின்று பேசினார், மீண்டும் அவர் இருக்கையில் எப்படி உட்கார்ந்து மக்களை பார்த்தார் என்பதைக் குறித்து, விஜய் அமர்ந்த இடத்தில் அமர வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரிவாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் அடிப்படையில் விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

