அரியலூர் நகரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்ட திருவிழாவை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா” “கோவிந்தா” என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலில் ஆகும். ஆறடி உயரமுள்ள தசாவதார சிற்பங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள திருக்கோயில் இது மட்டுமே. இக்கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேரோட்ட திருவிழா கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம் பேச வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் ஆசி
வழங்கினார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. மேளதாள கச்சேரி, நடன குதிரைகள் ஊர்வலத்துடன் பூதேவி, ஸ்ரீதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக திருத்தேருக்கு எழுந்தருவினர். போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்ரீ நரசிம்மர் டிரஸ்ட் பொறுப்பாளர்கள் மற்றும்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷத்துடன் பேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தில் பங்குபெற்று பெருமாளை தரிசனம் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.