Skip to content

60 பவுன் நகை திருடு போனதாக பொய் புகார் – டாக்டர் தம்பதி அதிரடி கைது

தஞ்சாவூரில் 60 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக காவல் துறையிடம் பொய் புகார் அளித்த டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான திருடன் பிடிபட்ட போது, அவர் நகைகளைத் திருடவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பரிசுத்தம் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் மணி (61). இவரது மனைவி உமாபாரதியும் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் ஒரத்தநாட்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். கடந்த 7-ம் தேதி தஞ்சாவூரில் உள்ள தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு ஒரத்தநாடு சென்ற இவர்கள், மீண்டும் 8-ம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தெற்கு காவல் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரில், பீரோவில் இருந்த நெக்லஸ், தாலி செயின், வளையல் என மொத்தம் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனதாகத் தெரிவித்திருந்தனர்.

புகாரைப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் மதுரை மாவட்டம் விளாங்குடியைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன் (41) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 20-ம் தேதி மதுரையில் வைத்து அவரைப் பிடித்த போலீசார், தஞ்சாவூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் பாண்டியன் அந்த வீட்டிலிருந்து வெறும் இரண்டு சட்டைகளையும், சுமார் ஒரு கிலோ எடையுள்ள பஞ்சபாத்திரங்களையும் மட்டுமே திருடியதாக தெரிவித்தார். மேலும் அந்த வீட்டில் தங்க நகைகளோ அல்லது வெள்ளிப் பொருட்களோ இல்லை என்பதையும் அவர் போலீசாரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, டாக்டர் மணி மற்றும் உமாபாரதியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தங்களது நகைகள் அனைத்தும் ஒரத்தநாட்டில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக இருப்பதை ஒப்புக்கொண்டனர். போலீசாரின் நேரத்தை வீணடித்து, மிகைப்படுத்திப் பொய் புகார் அளித்ததற்காக டாக்டர் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். திருட்டில் ஈடுபட்ட கார்த்திக் பாண்டியனும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.

error: Content is protected !!