Skip to content

போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு… 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை நிர்வாகத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மையத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், வடுவூர் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (50). இவர் சிங்கப்பூரில் பொறியியல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது இளைய சகோதரர் விஜயகுமார் (48). இவருக்கு கிருஷ்ணவேணி என்பவருடன் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமாகி, இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.
இதனால், மனமுடைந்த விஜயகுமார் மதுவுக்கு அடிமையாகி வீட்டில் பிரச்னை செய்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூனில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். ஆனாலும், போதைப் பழகத்தில் இருந்து அவர் விடுபடவில்லை.
இதையடுத்து திருச்சி மாவட்டம், அதவத்தூர் பகுதியிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி 8-ந் தேதி விஜயகுமாரை அவரது குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 10-ந் தேதி (சனிக்கிழமை) விஜயகுமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக போதை மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், முத்துகுமாரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த முத்துகுமார், தனது சகோதரர் விஜயகுமாரை பார்த்தபோது அவரின் கை மணிகட்டு, இடது தோள்பட்டை வலது கை முட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் முத்துகுமார் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
போதை மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் த.மணிகண்டன் (50), மையத்தின் வார்டன் திருச்சி நெ.1.டோல்கேட்டைச் சேர்ந்த சீ.மணிமாறன் (29), அங்கு பணியாற்றி வந்த அதவத்தூரைச் சேர்ந்த மு.பெரியசாமி ( 34), லால்குடியைச் சேர்ந்த ம.கிருஷ்ணமூர்த்தி (30), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செ.அறிவுமணி (45), திருவையாறு வளப்பகுடியைச் சேர்ந்த ம.அபிஷேக் (27), திருச்சி மாவட்டம், தொட்டியம் அப்பநல்லூரைச் சேர்ந்த ப.சூர்யபிரகாஷ் (28) ஆகிய 7 பேரும் விஜயகுமாரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று(திங்கள்கிழமை) காலை உயிரிழந்தார். இதையடுத்து 304(2) என்ற பிரிவில் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை தாக்கிய போதை மறுவாழ்வு மைய இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை நிர்வாகத்தினர் தாக்கியதில் உயிரிழந்ததைடுத்து, அந்த மையத்துக்கு ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ், ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கதிவரன் ஆகியோர் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

error: Content is protected !!