கடலூர் செம்மங்குப்பம் அருகே இன்று காலை, ஒரு கிருஷ்ணசாமி என்ற தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். கேட் மூடப்படாததால் டிரைவர் சாவகாசமாக ரயில்வே கடே்டை கடந்தார். அப்போது விழுப்புரதத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் ரயில் வேகமாக வந்து பள்ளி வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த பள்ளி மாணவர் மற்றும் ஒரு மாணவி, உயிரிழந்தனர். 10ம் வகுப்பு மாணவர்கள் செழியன், விஸ்வேஸ் உள்பட சிலர் படுகாயம் அடைந்தனர். வேன் டிரைவர் மஞ்சகுப்பம் சங்கர் என்பவரும் படுகாயமடைந்தார். அவர்கள்
உடனடியாக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இறந்த மாணவ மாணவி இருவரும் 6ம் வகுப்பு படித்து வந்தனர். ஒருவர் தொண்டமாந்துரையை சேர்ந்தவர். அவரது பெயர் நிவாஸ். சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சாருமதி(11) என்ற மாணவியும் விபத்தில் இறந்தார்.
ரயில் மோதியதில் வேன் நொறுங்கியது. அதில் இருந்த பள்ளி குழந்தைகள், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தண்டவாளம் எங்கும் சிதறி கிடந்தன.
காயம் அடைந்த மாணவ மாணவியருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கேட் கீப்பர் பங்கஜ் என்பரை கடுமையாக தாக்கினர். இதில் அவரும் படுகாயமடைந்தார். அவர் ரயில் வருவதை அறியாமல் தூங்கி விட்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிகிறது.