Skip to content
Home » அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் தகராறு… அலறியடித்து ஓடிய நோயாளிகள்…

அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் தகராறு… அலறியடித்து ஓடிய நோயாளிகள்…

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே அந்திலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் அதே பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் குறித்து டேங்க் ஆபரேட்டர் சண்முகம் என்பவரை மதுபோதையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், அவரது உறவினர் தமயந்தி, மகன் பிரபு ஆகியோர் ஞானபிரகாசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதில் குடிபோதையில் இருந்த ஞானப்பிரகாசம் தரப்பினர், பிரபு உள்ளிட்டோரை தாக்கி உள்ளனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்டதில், பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர். அப்போது மீண்டும் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் அங்கிருந்த பொருட்களை எடுத்து தாக்கிக் கொண்டதால், மருத்துவமனை வளாகமே கலவரக் காடாக மாறியது.
20க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஞானப்பிரகாசம் தரப்பு தாக்கியதில் அப்பு, குரலமுதன், சிவிசெழியன் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். அதேபோல் மற்றொரு தரப்பில் மீனாட்சி, பிரபு, கலைச்செல்வன், சத்தியமூர்த்தி, ஏழுமலை உள்ளிட்டோர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் அளித்த புகார்களின் பேரில், இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் பெரும் அச்சத்துடன் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!