இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று உள்ளார். இன்று அவர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறும்போது , இது இருநாடுகளின் உறவில் வரலாற்று சிறப்பு மிக்கநாள். இரு நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் நன்மை பயக்கும். இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். இது பொருளாதார ஒப்பந்தம் மட்டுமல்ல. இரு நாடுகளின் வளர்ச்சிக்கான திட்டம். பகல்காம் தாக்குதலின்போது இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்கு நன்றி. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் வைரம், கடல் உணவு ஜவுளி, உணவு உள்ளிட்ட பல துறைகள் பயனடையும். இந்திய இளைஞர்கள், மீனவர்கள் பயனடைவார்கள். சிறுகுறு தொழில் துறையினர் பயனடைவார்கள். பிரிட்டனில் தயாரிக்கப்படும் மருந்துகள் நமக்கு நியாயமான விலையில் கிடைக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது: பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு இது நல்லது. இது வரலாற்ற சிறப்பு மிக்க நாள். இந்தியாவுடன் இங்கிலாந்துக்கு தனித்துவமான வரலாற்று பிணைப்பு உண்டு. இந்த ஒப்பந்தத்திற்காக பல ஆண்டுகள் பேச்சு நடத்தி வந்தபோதும் இப்போது தான் அது கையெழுத்தாகி உள்ளது. பொருளாதார குற்றவாளிகள் பிரச்னையில் இங்கிலாந்து இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது என்றார்.