Skip to content

இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் கடல் வழி போக்குவரத்துக்கான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து 2 இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஹொர்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது.

போருக்கு மத்தியில் இந்தியாவுக்கான முதல் எண்ணெய் கப்பல் நேற்று மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்திக்கு சற்று முன்பு எரிவாயு நிரப்பட்ட இந்தியாவுக்கான 8 கப்பல்கள் நிற்கின்றன. இந்த கப்பல்களை இயக்க அனுமதி பெறுவது தொடர்பாக ஈரானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தை பயன் உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் அதிகாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்தியாவுக்கான ஈரானின் தூதர் முகமது பதாலியிடம் வெள்ளிக்கிழமை ஹோர்முஸ் நீரிணையை இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகக் கடப்பதற்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளதா? என்று டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அவர் கூறியதாவது:
ஆம். இந்தியா எங்கள் நட்பு நாடு. அதை இன்னும் இரண்டு முதல் மூன்று மணிநேரங்களில் நீங்கள் காண்பீர்கள். இந்தியாவும் ஈரானும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என நம்புகிறோம்.
இது எங்கள் துயரம், அதே சமயம் உங்கள் துயரமும் கூட, இதன் காரணமாகவே இந்திய அரசு எங்களுக்கு உதவுகிறது. நாங்களும் இந்திய அரசுக்கு உதவ வேண்டும். ஹோர்முஸ் வழியாக இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

error: Content is protected !!