குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஜூலை 13 ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி கரகம் பாலித்தல், 27ம் தேதி தூக்குதேர் நிகழ்ச்சி நடைபெற்றன. அதனை தொடர்ந்து இன்று இரவு ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வழிபடும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
வளையார்பாளையம்,, பிச்சம்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் 10, 15 அடி உயரமுள்ள சொல்லை எனப்படும் ஈட்டியை சொருகி தாரை தப்பட்டைகள் முழங்க பெரியோர்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆட்டின் தலையை பூசாரி வானத்தை நோக்கி வீச இரண்டு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆட்டின் தலையை குத்த முயன்றுள்ளனர். இதில் பிச்சம்பட்டியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் ஆட்டின் தலையை தனது ஈட்டியல் குத்தி கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற இளைஞருக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு தாரை தப்பட்டைகள் முழங்க ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.