லோக்சபா சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து தேஜ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தலுக்கு முன்பாகவே, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் அங்கு தனித்தனியே போட்டியிட்டன. தற்போது தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் மீது திரிணமுல் காங்., அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திரிணமுல் காங்., மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கருத்து தெரிவிக்கையில் சபாநாயகர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து திரிணமுல் காங்., கிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை. டிவி மூலம் பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன். டெப்ரிக் ஓ பிரையனும் என்னிடம் கேட்டார். இது குறித்து எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என தெரிவித்தேன். இது குறித்து காங்., விளக்கம் அளிக்க வேண்டும். காங்., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். எங்கள் தலைவர்கள் முடிவு செய்வர். கட்சி மேலிடம் அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
