பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்தநெல்லும் அதிக அளவு ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை தற்போது உள்ள 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி, கொள்முதல் விதிகளில் தளர்வு அளிக்க வேண்டும்’ என்று கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத் துறை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் மற்றும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய இருப்பு மேலாண்மை மற்றும் ஆய்வு நிறுவன துணை இயக்குநர் ஆகியோருக்கு மத்திய உணவு, பொது விநியோகத் திட்ட அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நெற்பயிர் கொள்முதல் விதிகள் தொடர்பாக தளர்வு கோரிதமிழக உணவுத் துறை செயலரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. இதுகுறித்த தற்போதைய நிலையை அறிய, இந்திய உணவுக்கழகம் மற்றும் தமிழக அதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். இதற்காக, உணவுத் துறையின் இருப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்தலைமையில் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்களுடன் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் உடனடியாக தமிழகம் சென்று பணிகளை தொடங்க வேண்டும். தமிழக அரசு மற்றும் இந்திய உணவுக் கழக சென்னை மண்டல அலுவலகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். பிறகு, இந்திய உணவுக் கழகத்தின் மண்டல, மாவட்ட அலுவலக பரிசோதனைக் கூடங்களில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். 3 குழுக்களும் இணைந்து ஆய்வு முடிவு களை அறிக்கையாக தயாரித்து,மத்திய உணவுத் துறைக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மழை, பனிப்பொழிவு போன்ற காரணங்களால், அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துவிட்டதால், அதை 17% இலிருந்து 22% ஆக உயர்த்த சிறப்பு அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்து, நெல் தரம், ஈரப்பதம் ஆகியவற்றை ஆய்வு செய்ய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் 3 குழுக்களை அமைத்தது.
இந்த மத்திய ஆய்வுக் குழுக்கள் இன்று (அக்டோபர் 25, 2025) முதல் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அந்த ஆய்வுப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், புதிய ஆய்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

