பொங்கல் பரிசு தொகுப்பில் சட்டி, பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை, அரசு கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள் வழங்கல் துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்

பண்டிகையின் போது பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டை காரர்களுக்கு வழங்கி வருகிறது.
பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால், அதையே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்டம் செய்வதற்கு தேவையான தரமான மண்ணை எடுத்து வர அனுமதி மறுக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் மண்பாண்டங்கள் செய்வதற்கு தேவையான தரமான மணல் இல்லை எனவும், மண்பாண்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் போன்ற அருகாமை மாவட்டங்களில் இருந்து மண்ணை அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்து வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியவரும் பொங்கல் பரிசு தொகையில் சட்டி, பானை உள்ளிட்ட மண் பாண்ட பொருட்களையும் வழங்கி இதனையே நம்பி இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

