தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட A-1 ரக சிறிய விமானம், இன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிப் புறப்பட்டது. விமானம் ரூர்கேலாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நகரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்டா என்ற பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். விபத்தில் சிக்கிய ஆறு பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

