கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் 27 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய வாசலில் பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைத்து புனித தீர்த்தங்கள் நிரம்பிய கலசங்கள் பிரதிஷ்டை செய்து தொடர்ச்சியாக யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து யாக குண்டத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை பக்தர்கள் சுமந்து வந்த பிறகு யாக குண்டத்தில் சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து கலசம் மற்றும் யாக குண்டத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்று மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, அபிஷேக பொடி, பல்வேறு வகையான பழங்கள் அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக விபூதியால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, தங்க கவசம் அணிவித்த பிறகு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற 27 ஆம் ஆண்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பான முறையில் அன்னதானமும் நடைபெற்றது.