அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் பி.கேசேகர்பாபு ஆகியோர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மேடவாக்கம் டேங்க் ரோடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் (TNIMHANS, Kilpauk) புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும்;
கொளத்தூர்-பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உள்வட்ட சாலையை அடைவதற்கும், கொளத்தூர் ஏரி பூங்கா செல்வதற்கும் 600 மீட்டர் நீளம் மற்றும் 7.50 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையின் இருபுறமும் 2.00 மீட்டர் அகலத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், கொளத்தூர் ஏரிக்கரையை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:“ஏழு தளங்கள் கொண்ட மனநல மருத்துவமனையின் முதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.90 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனியில் பணிகள் 18 மாதத்திற்குள் நிறைவுப் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
இதில், மருத்துவ பயனாளிகளுக்கு போதுமான அளவு மருந்து கிடங்குகள், சிடி ஸ்கேன் மையம், முதுநிலை மாணவர்கள் பயன்பாட்டிற்கான வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கி பணியாற்றுவதற்கும் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “சென்னை மாநகராட்சியில் குறைந்த அளவுதான் நெடுஞ்சாலைகள் உள்ளன. 85 சதவிகித சாலைகள் மாநகராட்சி சாலைகளாக உள்ளன. மழை காலங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, அடையாறு மத்திய கைலாஷ் மேம்பால பணிகளை தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதி உள்ளது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்.
மழை காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, 3.2 கி.மீ தூரத்திற்கு அண்ணா சாலையில் தேனாம்பேட்டை – சைதாபேட்டை வரையும், கிழக்கு கடற்கரை சாலையில் 14 கி.மீ தூரத்திற்கு புதிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றொரு இடமான திருவான்மியூரில் இருந்து 14 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான மேம்பாலத்திற்கான ஒப்பந்தம் 2026 நவம்பர் வரை உள்ளது. ஆனால், பொங்கல் பண்டிகைக்குள் அந்த பணியை முடிக்க ஆயத்தப்படுத்தி வருகிறோம்” என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.