சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா (21) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே, கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த 18-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
நேற்று இரவு பிறந்து சில நாட்களே ஆன குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த ஆதிகேசவன், சுசித்ராவிற்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சுசித்ராவைப் பார்த்துவிட்டுத் திரும்பிய அவர், இரவு மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து உறங்கியுள்ளார்.
இன்று அதிகாலை ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், தூங்கிக் கொண்டிருந்த ஆதிகேசவனைச் சூழ்ந்து, மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்திகளால் சரமாரியாக வெட்டினர். இந்த கொடூரத் தாக்குதலில் ஆதிகேசவன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்து வந்த போலீசார் ஆதிகேசவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதல் கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்ததா அல்லது பழைய பகை காரணமாகப் பழிக்குப்பழி வாங்க நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

