திருப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஈரோடு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ராமமூர்த்தி (28) என்பவருடன் பெண் தோழி மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் செல்போன் மூலம் பேசி வந்தவர்கள் பிறகு காதலிக்க துவங்கியுள்ளனர். 4 மாதங்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், ராம மூர்த்தியின் செயல்பாடுகள் பிடிக்காமல் அவரிடம் பேசுவதை இளம்பெண் தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி நாமக்கல்லில் இருந்து திருப்பூர் வந்து பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணின் குடும்பத்தினரை அறிவாளை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் குடும்பத்தினர் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் ராமமூர்த்தி வீட்டில் இருந்து வெளியேறி அரிவாளை கையில் வைத்தபடி பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பூர் தெற்கு போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெண்ணின் புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

