Skip to content
Home » தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

  • by Senthil

டெல்டா மாவட்டங்களில் முக்கியமான தொகுதியாக  கருதப்படும் தஞ்சை தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவில் யார்யார் போட்டியிடலாம். யாருக்கு வாய்ப்பு இருக்கு? களம் இறக்கப்படும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு  அரசியல்வாதிகளையும் தாண்டி பொதுமக்களையும்  ஈர்த்துள்ளது. கத்திரி வெயில் வருவதற்கு முன்பே அரசியல் களத்தை கொதிக்க விட்டுள்ளது இந்த எதிர்பார்ப்பு.

தஞ்சாவூர் தொகுதியில்  8 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  திமுக 8 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்று இருக்கிறது.  இவர்களில் திமுக சார்பில் பழனிமாணிக்கம் மட்டும் 6 முறை  தஞ்சையில் வெற்றி பெற்றுள்ளார். 3 முறை இதே தொகுதியில்  வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். ஒரு முறை இவருக்கு இந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  திமுக வரலாற்றில் ஒரு நபர் 9 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டது  இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வது முறையும் இவர் வாய்ப்பு கேட்டு  உள்ளார். தசாவதாரம் எடுக்க  இவருக்கு வாய்ப்பு  அளிக்கப்படுமா என்பதற்கு விடை  சில நாட்களில் தெரியவரும்

இவர் தவிர எம்.ராமச்சந்திரன் முன்னாள் திமுக எம்எல்ஏ (தலைமை செயற்குழு உறுப்பினர்),  கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி முன்னாள் எம்எல்ஏ.(தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வடுவூர் பந்தல் சிவா, மேயர் சண். ராமநாதன் ,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி. இவர்கள் தவிர  மன்னார்குடியை சேர்ந்த   தலையாமங்கலம் பாலு உள்பட சிலரும் தஞ்சை தொகுதிக்கு குறி வைத்து உள்ளனர். அனைவரும்  நேர்காணலுக்கும் சென்று வந்துள்ளனர். திருவோணம் ராமச்சந்திரன் கட்சிக்காரர்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்றிருந்தாலும்,  முதியவர் என்பதால் அவர் போட்டியில் இல்லை என்கிறார்கள்.  வயதை காரணம் காட்டினால், தனது மகனுக்கு சீட் கொடுங்கள் என்கிறார்  எம். ராமச்சந்திரன்.

அதே நேரத்தில் திமுக சார்பில் கனிமொழி, தமிழச்சி தவிர,  3வது பெண் வேட்பாளர்  இல்லை என்பதால்  அஞ்சுகம் பூபதிக்கு வாய்ப்பு குறைவு தான்.  மகேஷ் கிருஷ்ணசாமி , தலையாமங்கலம் பாலு,  தசாவதார நாயகன் ஆகியோர் தான் ரேசில் இருக்கிறார்கள் என்கிறார்கள் திமுகவினர்.

பந்தல் சிவா-  திமுக தலைமையிடம் மிகவும் நெருக்கமானவர். இவரை நேரம் வரும்போது அரசியலில் பயன்படுத்திக் கொள்வோம் என்று இவரின் மகள் வரவேற்பு விழாவில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை இப்போது இவரது ஆதரவாளர்கள் நினைவுபடுத்தி பாராளுமன்ற தேர்தலில் சீட்டு கிடைக்க வாய்ப்பு இருக்குங்க என்கின்றனர். இப்படி  ஒவ்வொருவரும் தங்கள்  ஆதரவாளருக்கு தான் சீட் என்று சொல்லிக்கொண்டிருக்க இதற்கான தெளிவான விடை அடுத்தவாரம் கிடைத்து விடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!